

மத்திய அரசின் புதிய திருத்த சட்டத்தின்படி, இனிமேல் 'பான் கார்டு' பெறுவதற்கு, பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ள 'பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தச் சட்டம்)-ன் கீழ், ஒரு குடிமகனின் அங்கீகாரத்துக்கு பிறப்புச் சான்றிதழே ஒற்றை ஆவணமாக இனி செயல்படும். எனவே இது 'பான் கார்டு' விண்ணப்பங்களிலும் அமல்படுத்தப்படுகிறது. அதனால் புதிய 'பான் கார்டு' கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தப் பிறப்புச் சான்றிதழை இணைப்பது அவசியம் ஆகும்.
ஆதார் அட்டையில் பிறந்த தேதி இருந்தாலும், பிறப்புச் சான்றிதழ் கூடுதல் ஆதாரமாகக் கேட்கப்படும். ஏற்கனவே 2023-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, அரசு வழங்கிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றால் 'பான் கார்டு' வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நடைமுறை இனி அனைவருக்கும் பொருந்தும்.
மேலும் 'பான் கார்டு' விண்ணப்பத்தில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் இனி 100 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு சிறிய இனிஷியல் மாற்றம் அல்லது எழுத்துப்பிழை இருந்தாலும் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.
ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், அதில் பிறந்த தேதி அல்லது பெயரை மாற்ற விரும்பினால், இனி கட்டாயம் பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒரே நபர் பல்வேறு பெயர்களில் அல்லது தவறான பிறந்த தேதிகளைக் கொடுத்துப் பல பான் கார்டுகளைப் பெறுவதைத் தடுக்கவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரி ஏய்ப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என வருமான வரித்துறை எதிர்பார்க்கிறது.