புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் அமைவது தமிழருக்கு கிடைத்த பெருமை- பிரேமலதா

உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா?கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது.
புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் அமைவது தமிழருக்கு கிடைத்த பெருமை- பிரேமலதா
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்தை கண்டித்தும், கேரளாவிற்கு தென்காசி வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

அவருக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் தயாளலிங்கம் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மாலதி, துரை, பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி குறை சொல்கிறார்கள். இதை தட்டிக்கேட்ட ஒரு நியாயமான அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வகையில் நியாயம்?. உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வி.ஏ.ஓ. குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.1 கோடி அறிவித்துள்ளார். இதனால் போன உயிர் வந்துவிடுமா. நியாயமாக உழைக்கும் அதிகாரிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?.

3 மருத்துவ கல்லுரிகளின் உரிமம் ரத்து செய்து இருக்கிறார்கள். ஸ்டான்லி கல்லூரி உரிமத்தை ரத்து செய்தது தமிழகத்திற்கு ஒரு தலை குனிவு. பள்ளிக்கூட கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடை ஒரு தெருவுக்கு 10 திறக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள் இன்று. நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும். அந்த நல்ல நிகழ்வை வரவேற்போம். தமிழகத்தில் இருந்து செங்கோல் அங்கு அமைவது ஒட்டு மொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com