அய்யம்பாளையம் அருகே தேக்கு மரங்களை வெட்டுவதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு- போலீசாருடன் வாக்குவாதம்

கோவில்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள விலை உயர்ந்த லட்சக்கணக்கான தேக்கு மரங்களை வெட்டி எடுத்துச் செல்லக்கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்
போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்
Published on

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்த அய்யம்பாளையத்தில் இருந்து மருதாநதி செல்லும் வழியில், சுமார் 15 ஏக்கரில் தென்னை, தேக்கு, புளியமரங்கள் உள்ளது. இந்த மரங்களை வெட்டி எடுத்துச் செல்வதற்கு கடலூரைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் அரசு அனுமதி பெற்று வெட்டி எடுத்துச் செல்கிறார்.

இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கன்னிவாடி ஜமீன்தார் வேப்பிலைநாச்சியார் மற்றும் கூப்பநாச்சியார் கோவிலுக்காக அந்த இடத்தை அய்யம்பாளையம் அருகே உள்ள தேவரப்பன்பட்டியைச் சேர்ந்த காசிராஜன் உறவினர்கள் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கு உள்ள தேக்கு மரங்களை கடலூரைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் வெட்டி செல்வதை அறிந்த, தேவரப்பன்பட்டி காசிராஜன் குடும்பத்தினர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அவர்கள் மரம் வெட்டி எடுத்து செல்வதை தடுக்ககோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அங்கு சென்ற காசிராஜன் உறவினர்கள் மற்றும் பா.ஜ.க. மாவட்டச் செயலாளர் பாலகணேசன், ஆத்தூர் ஒன்றிய தலைவர் பாண்டியன், துணைத்தலைவர் அயன்வேல், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் உமாகணேசன் மற்றும் நிர்வாகிகள், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரனிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கோவில்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள விலை உயர்ந்த லட்சக்கணக்கான தேக்கு மரங்களை வெட்டி எடுத்துச் செல்லக்கூடாது. இதுகுறித்து திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் போலீஸ் தரப்பில் தேக்கு மரங்கள் உள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது என்றும் அந்த இடத்தில் உள்ள தேக்கு மரங்களை வெட்டி எடுத்துச் செல்வதற்கான அரசு அனுமதியை கடலூரைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் பெற்று எடுத்துச் செல்வதாகவும், இங்கு பிரச்சினை செய்ய வேண்டாம் எனவும் கூறினர்.

இதனால், பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com