

சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அரும்பாடு பட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானது தான் வாக்கு எண்ணிக்கை என்பதால் அதில் அதிமுக - பாமக கூட்டணி கட்சிகளின் முகவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மார்ச் மாத மத்தியில் தொடங்கி ஏப்ரல் 21-ஆம் தேதி வரை நடைபெற்ற பரப்புரையின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு - பகல் பாராமலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமலும் உழைத்ததிலும், ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது தேனீக்களைப் போலப் பணியாற்றி அனைத்து வாக்காளர்களையும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று வாக்களிக்கச் செய்ததிலும் அதிமுக, பா.ம.க., பா.ஜ.க., அ.ம.மு.க, த.மா.கா., ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இரு கட்டங்களை விட வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டம் தான் மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தலில் வெற்றி நமக்கு தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. வாக்குப்பதிவு நாளன்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான தங்களின் கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியதைப் பார்க்க முடிந்தது. நாம் அடையப் போகும் இந்த வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் அறிவிக்கப்படவுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் தான். அதனால் தான் வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டத்தில் நாம் இன்னும் விழிப்புடனும், ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும்.
ஐந்தாண்டு காலமாக தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடித்த திமுக, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அனைத்து வகையான தில்லுமுல்லுகளையும் அரங்கேற்றும். தமிழ்நாட்டில் வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பலவும் கூட திமுகவின் சித்து விளையாட்டுகள் தான். மக்களுடன் மக்களாக களப்பணியாற்றி, அவர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்த நமக்கு மக்களின் மனநிலையும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கோபமும் நன்றாகத் தெரியும். அவ்வாறு இருக்கும் போது செயற்கையாக சித்தரிக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எவரும் நம்பத் தேவையில்லை. மாறாக, வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் வாக்கு எண்ணும் நாளான மே 4-ஆம் தேதி காலை 6.00 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று விட வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து படிவங்களையும் முகவர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைத் தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவானதாக 17-சி படிவத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையும், அந்த வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையும் ஒன்றாக உள்ளனவா? என்பதை சரிபார்க்க வேண்டும். அதன்பின்னர் தான் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்குவதற்கே அனுமதிக்க வேண்டும்.
எத்தகைய சூழலிலும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டு, அதன் விவரங்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையை தொடங்க அனுமதிக்கக் கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் தொகுதியின் தேர்தல் அதிகாரி, பார்வையாளர் ஆகியோரிடம் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் தவறுகள் நடந்தால் உடனடியாக அவர்களிடம் புகார் செய்ய வேண்டும். அதையும் மீறி முறைகேடுகளில் ஈடுபட எவரேனும் முயன்றால் உடனடியாக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுத்து மூலம் புகார் தெரிவிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாகவே அஞ்சல் வாக்குகள் எண்ணி முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதிகபட்சமாக கடைசி இரு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக அஞ்சல் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படுவதை பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் முகவர்கள் உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் எந்த சூழலிலும் முகவர்கள் அவர்களின் கடமையிலிருந்து விலகக் கூடாது.
தமிழ்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போவது இந்தத் தேர்தலின் முடிவுகள் தான். அதில் எந்த மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் முகவர்கள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். வெற்றி நமதே! என கூறியுள்ளார்.