

ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம் என்று அன்புமணி கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசிவிட்டு, மேகதாது அணை கட்டும் பகுதியை பார்வையிட்டால், அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு பாதகமாக இருக்கும்.
மேகதாது அணையை, தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. அவ்வாறு அங்கீகரிக்காத ஒன்றுக்காக, பேச்சுவார்த்தை நடத்துவதில், எந்த அர்த்தமும் கிடையாது. அது சம்பந்தமாக பேச்சுவார்த்தை, மத்திய அரசிடம், பிரதமர் மோடியிடம் நடத்த வேண்டும்.
மேகதாது அணை கட்டுவதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டுக்கு, தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகா, அங்கு அணைக்கட்டி விட்டால், நமக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மத்தியில் உள்ள பா.ஜ.க., கர்நாடகத்தின் காங்கிரஸ் கூட்டு சதி செய்கின்றனர். இந்த சதியில், தமிழ்நாடு விழக்கூடாது.
கர்நாடகா அணையே கட்டக்கூடாது என்று நாம் கூறிக் கொண்டு இருக்கையில், அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? முதலமைச்சர் விஜய்யை யார் அவ்வாறு வழி நடத்துகிறார்? என்று தெரியவில்லை. இது தவறான ஒரு போக்கு. இது கண்டிக்கத்தக்கது.
மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில், ஒரு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, டெல்லியில் உள்ள தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எங்களை டெல்லிக்கு, பிரதமரை சந்திக்க அழைத்து செல்லட்டும். நாங்கள் செல்வதற்கு தயாராக இருக்கிறோம்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில், காடுகளை அழித்து, கிரேட் நிக்கோபார் திட்டத்தை அமைக்க கூடாது என்று ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மேகதாது அணை கட்டும் போது 12,500 ஏக்கர் காடுகள், புலிகள் சரணாலயங்கள் 3, அவைகளை எல்லாம் அழித்து, அணை கட்ட வேண்டிய சூழ்நிலை வரும்.
எனவே மேகதாது அணையை கட்டக்கூடாது என்று சொல்லுவதற்கு ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா? இல்லையேல் மாணிக்கம் தாகூர் ஆவது, அதை கூறுவதற்கு தைரியம் இருக்கிறதா?
ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.