

மதுரை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள், ஒப்பந்தங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான சி.டி.ஆர்.நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்,
மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் தப்பிக்க முடியாது என்றும், ஊழல் குறித்த புகார்களுக்கு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இணைந்து விரிவான மறுஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆலோசனைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் நடந்த விதிமீறல்களால், அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த இழப்புகள் எந்தெந்த ஆண்டுகளில், எதனால் ஏற்பட்டன என்பது குறித்து முழுமையாக ஆராயப்பட்டு வருவதாகவும், ஆட்சியரும், ஆணையரும் இணைந்து இன்னும் சில நாட்களில் இதுகுறித்த கூட்டு அறிக்கையை வெளியிடுவார்கள். அதன் அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றார்.
மாநகராட்சி ஊழல் மட்டுமின்றி, மதுரையில் செயல்பட்டு வரும் மற்றும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கல்குவாரிகளிலும் தணிக்கை நடத்த சுரங்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் நடந்த விதிமீறல்கள், சட்டவிரோத மணல் மற்றும் கனிமவளக் கொள்ளை ஆகியவை குறித்து முழுமையாக ஆராயப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல சட்டவிரோத குவாரிகளின் செயல்பாடுகள் கடந்த வாரம் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், அமைச்சர் நிர்மல்குமார் தகுந்த ஆதாரங்கள் இன்றி ஒட்டுமொத்த கவுன்சிலர்கள் மீதும் அவதூறு பரப்புவதாகக் குற்றம்சாட்டினர்.
"ஊழல் செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம், ஆனால் ஆதாரங்கள் இல்லாமல் அனைவரையும் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதை ஏற்க முடியாது" என்று கூறிய திமுக கவுன்சிலர்கள், அமைச்சர் தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அடுத்த கூட்டத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் அவரது இல்லம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், புதிய ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெறுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.