ஜே.சி.பி. வாகனம் மோதி விபத்து- அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பலி

விபத்து குறித்து தகவலறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான உலகலாபதி
Published on

மேலூர் சட்டமன்ற தொகுதியில் 10 ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக இருந்த பெரிய புள்ளான் மகன் விபத்தில் இறந்தது தொகுதி மக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரிய புள்ளான். இவர் இந்த தொகுதியில் 2016, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வாக இருந்தார்.

பெரிய புள்ளானுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி தனது கணவருடன் தனிக்குடித்தனம் சித்து வருகிறார். 2-வது மகள் படித்து வருகிறார். ஒரே மகனான உலகலாபதி (வயது 21) சென்னையில் உள்ள சத்தியபாமா சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்காக உலகலாபதி வேளச்சேரியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கியிருந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். வார விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊரான மேலூருக்கு சென்றுவிடுவார்.

விபத்து

இந்தநிலையில் இன்று காலை உலகலாபதி தனது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் காலை 7.30 மணிக்கு கல்லூரிக்கு புறப்பட்டார். காந்தி மண்டபம் மேல்பாலத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே சென்ற போது போக்குவரத்து நெரிசலால் உலகலாபதி பிரேக் போட்டார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த ஜே.சி.பி. வாகனத்தின் முன்பகுதி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த உலகலாபதி சாலையில் தவறி விழுந்தார். மோதிய வேகத்தில் பின்னால் வந்த ஜே.சி.பி. அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உலகலாபதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவலறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலூர் சட்டமன்ற தொகுதியில் 10 ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக இருந்த பெரிய புள்ளான் மகன் விபத்தில் இறந்தது தொகுதி மக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு பலியான உலகலாபதி உடல் மேலூருக்கு கொண்டு வரப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com