புதிதாக திறக்கப்பட்ட திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு

அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். விதிமுறைக்கு உட்பட்டு நாங்கள் திருப்தியாக செய்துள்ளோம்.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்த காட்சி.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்த காட்சி.
Published on

திருப்பூர்:

திருப்பூரில் ரூ.127 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தனர். 500 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை சேவையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தேசிய மருத்துவ கவுன்சிலில் இருந்து 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அரசு மருத்துவக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் விதம், ஆய்வகம், போதுமான டாக்டர்கள் உள்ளார்களா, மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வசதிகள், சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வு குறித்து டீன் முருகேசன் கூறும்போது, அரசு மருத்துவக்கல்லூரிக்கு வரும் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கு முன் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் பட்சத்தில் அங்கீகாரத்தை புதுப்பித்து வழங்குவார்கள். திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து ஏற்கனவே தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்பிவிட்டோம். 5 பேர் கொண்ட குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். விதிமுறைக்கு உட்பட்டு நாங்கள் திருப்தியாக செய்துள்ளோம். குழு ஆய்வுக்கு பிறகு திருப்தி அளிக்கும்பட்சத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.

சென்னை ஸ்டான்லி, திருச்சி, தர்மபுரி ஆகிய 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து ள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் புதுப்பிப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அதிரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com