

கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய காவிரி நீரைப் பெற்றுத்தரக் கோரி, தமிழ்நாடு அரசு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும், இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, அதற்கு முற்றிலும் தடைவிதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது புதிய மனுவில் வலியுறுத்தியுள்ளது.
மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீர் வரத்து கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரமும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.
இதனை கருத்தில்கொண்டே கர்நாடக அரசின் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஆனால் அணையை கட்டியேத் தீருவோம் என கர்நாடகா முரண்டு பிடித்துவருகிறது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த சில பதில்கள் தமிழ்நாட்டிற்கு சாதகமற்று இருந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு புதிய மனுக்களை தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.