ரஜினி 2 கழகங்களையும் தூக்கி எறியும் மிகப்பெரிய சக்தியாக இருப்பார் - தமிழருவி மணியன்

ரஜினி 2 கழகங்களையும் தூக்கி எறியும் மிகப்பெரிய சக்தியாக இருப்பார் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.
ரஜினி 2 கழகங்களையும் தூக்கி எறியும் மிகப்பெரிய சக்தியாக இருப்பார் - தமிழருவி மணியன்
Published on

வேலூர் கே.வி.குப்பத்தில் பூங்கா, காந்தி சிலை மற்றும் பஸ் நிறுத்தம் திறப்பு விழா நடந்தது.

ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட் பூங்காவை திறந்துவைத்தார். காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தத்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திறந்து வைத்தார்.

பின்னர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீங்கள் அனைவரும் ரஜினிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள். தனக்காக எதையும் செய்யத் தயாராக உள்ள உங்களையெல்லாம் இந்த மண்ணை நேசிப்பவர்களாக மாற்றிய ரசவாதத்தைச் செய்திருக்கிறார்.

ரசிகர்களான உங்களை, மக்கள் நலன் சார்ந்த பாதுகாவலர்களாக அவர் மாற்றியிருக்கிறார். நீங்கள்தான் நாளை மாற்று அரசியல் மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள். அந்த மனிதனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக அமர்த்தி தமிழகத்தில் நல்லாட்சி மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள்.

ரஜினிகாந்த் தன்னளவில் உண்மையாக இருக்கும் மனிதன். இந்த சமூகத்தை, மக்களை உண்மையாக நேசிக்கும் மாமனிதன். தான் வாழக்கூடிய இந்த மண் முழுவதையும் அன்பால் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்ள வேண்டும் எனத் துடித்துத் தவமிருக்கும் மனிதன் ரஜினிகாந்த்.

உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து இனிமேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அவரை அழைக்க வேண்டாம். அந்தக் கட்டம் முடிந்துவிட்டது. தமிழகத்தின் முதல்வர் ரஜினிகாந்த் என்றே இனி அவரை அழையுங்கள்.

மலேசிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, உங்கள் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்னார்: “ஒரு நடிகனாக என் வாழ்வைத் தொடங்கினேன். நடிகனாகவே முடிந்து விடுவது என் வாழ்வின் லட்சியம் அல்ல,” என்றார்.

அபூர்வ ராகங்கள், பதினாறு வயதினிலேவில் அவர் வெறும் நடிகர். பல நடிகர்களில் ஒருவர். அடுத்த மெல்ல மெல்ல வளர்ந்து, தனது போட்டியாளர்கள் அனைவரையும் கடந்து அடுத்த கட்டமாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்தார். ஒரு நடிகனாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கக் கூடிய மனிதனுக்கு அதுதான் உச்சம். அதுவே போதும்.

ஆனால் அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நடக்க வேண்டும் என்று நினைக்கிற போதுதான், சூப்பர் ஸ்டார் என்கிற இடத்திலே இருந்து அடுத்த இடம் நோக்கி நகர்கிறார். அதுதான் தமிழகத்தின் மக்களுக்கு நல்வாழ்வு தருகிற முதல்வர் என்கிற இடம்.

அந்த இடத்தை நோக்கி அவர் நடக்க வேண்டும், அவர் அப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வாழ்க’ என்று சொல்வதை நிறுத்திவிட்டு, ‘தமிழக முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க’ என்று சொல்லிப் பழகுங்கள்.

ஒவ்வொரு சொல்லும் ஒரு மந்திரம். சொல்லற்ற ஓசையும் கூட ஒரு மந்திரம். வட மொழி மந்திரங்களைக் கேட்டால் நமக்கு அர்த்தமே புரியாது. வெறும் ஓசையாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஓசையைத் தொடர்ந்து உச்சரித்தால் மந்திரமாக மாறும். அந்த மந்திரமே அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வலைகள் மாபெரும் மாற்றத்தையே உருவாக்கும்.

தமிழகம் முழுவதும் எந்தத் திசை நோக்கித் திரும்பினாலும் ‘ரஜினிகாந்த் முதல்வர்’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். அதுவே மந்திரச் சொல்லாக, அதிர்வலைகளாக மாறும். தேர்தலில் அவர் வென்று மக்கள் ஆதரவுடன் நல்லாட்சி அமைக்க உதவும்.

‘இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’. தமிழகம் நல்வாழ்வு பெற வேண்டும் என்றால் இரண்டு கழகங்களையும் முற்றாக தூக்கி எறிய வேண்டும். இதுதான் என் தவம். இந்தத் தவத்தை நிறைவேற்ற கடைசியில் எனக்குக் கிடைத்துள்ள நம்பிக்கை தான் ரஜினிகாந்த்.

சிஸ்டம் கெட்டுவிட்டது என்றார் ரஜினி. எத்தனைப் பொருள்மிக்க, அர்த்தமிக்க வார்த்தை அது. இந்த மாநிலத்தை ஆண்ட இரு கழகங்களின் ஒட்டுமொத்த ஊழல்களையும் சீர்கேடுகளையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார்.

என் பெயரைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இப்போதே ஓடிவிடுங்கள் என்று பகிரங்கமாகச் சொன்னார் ரஜினி. தமிழக அரசியல் சரித்திரத்தில் எந்தத் தலைவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்? ரஜினிகாந்த் ஒருவரால்தான் இப்படிச் சொல்ல முடிந்தது.

தமிழகத்தில் இப்போது நடப்பது வெறுப்பரசியல். ஆனால் ரஜினிகாந்த் மனதில் யார் மீதும் வெறுப்பே கிடையாது. அவர் மனசு முழுக்க அன்புதான். அத னால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரையும் பாராட்டுகிறார்.

ஒரு திருமண மண்டபம் கட்டி சில இலவசத் திருமணங்களைச் செய்தால் போதாது... இந்த தமிழகத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் ரஜினி.

இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா, வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சோளிங்கர் ரவி மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com