அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார்: தமிழருவி மணியன் #Rajinikanth

தமிழக மக்கள் திராவிட கட்சிகளின் ஆட்சியை பார்த்து விட்டு வெறுப்பில் உள்ளனர். ரஜினிகாந்த் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவார் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறினார். #Rajinikanth
அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார்: தமிழருவி மணியன் #Rajinikanth
Published on

சென்னை:

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் முக்கிய தூண்டு கோலாக இருந்தார். ரஜினிகாந்துக்கு அரசின் ஆலோசனைகளையும் அவர் வழங்கி வருகிறார்.

ரஜினிகாந்த் அரசியலில் காலடி எடுத்து வைத்திருப்பது குறித்து தமிழருவி மணியன் பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:-

கேள்வி:- அரசியலுக்கு வந்துள்ள ரஜினிகாந்துக்கு எந்த அரசியல் கொள்கையும் இல்லை என்றும், அவர் அரசியல் முக்கியத்துவம் அல்லாத சமுதாயத்தை உருவாக்கி விடுவார் என்றும் பலர் விமர்சிக்கிறார்களே?

பதில்:- தமிழ்நாடு இப்போது எந்த வகையான அரசியல் கொள்கைகளை பின்பற்றி கொண்டு இருக்கிறது?

தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் கலாச்சாரத்தையே முழுமையாக மாற்றுவதற்குத்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார்.

திராவிட கட்சிகளும், அதன் தலைவர்களும் தொண்டர்களை கோ‌ஷம் எழுப்பவும், துதி பாடவும், கட்-அவுட் வைக்கவும், போஸ்டர் ஒட்டவும், நோட்டீசு கொடுக்கவும்தான் பயன்படுத்துகிறார்கள்.

ரஜினிகாந்த இந்த எல்லையில் இருந்து மாறுபட விரும்புகிறார். அவர் தனது தொண்டர்களை இந்த சமூகத்தின் காவலர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் தான் தொண்டர்களை அவர் காவலர்கள் என்று அழைத்தார்.

ஜெயலலிதா இல்லாத நிலையில் அதை பயன்படுத்தி அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று தி.மு.க. நினைக்கிறது. தினகரனை ஊடகங்கள்தான் பெரிய ஆளாக உருவாக்கி காட்டுகின்றன.

தமிழக மக்கள் திராவிட கட்சிகளின் ஆட்சியை பார்த்து விட்டு வெறுப்பில் உள்ளனர். ரஜினிகாந்த் இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்புவார். அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

கே:- ரஜினிகாந்த் அரசியலில் தான் ஒரு மாற்று நபர் என்பதை எந்த வழியில் நிரூபித்து காட்ட போகிறார்.

ப:- ரஜினிகாந்த் நடிகராக இருக்கலாம். ஆனால், மக்கள் ரஜினிகாந்தை வெறுமனே நடிகராக மட்டும் பார்க்கவில்லை. அவர் உண்மையான ஆளுமை கொண்டவர். எளிமையானவர். தனது உத்தரவாதத்தை காப்பாற்றுபவர்.

நமது அரசியல் தலைவர்கள் கொள்கைகளை பற்றி பேசும் போது, எனக்கு சிரிப்புதான் வருகிறது. பெரியாருக்கு ஒரு கொள்கை இருந்தது.

ஆனால், இன்றைய திராவிட கழகத்தால் தங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை. திராவிட இயக்கங்கள் வழியில் வந்த அரசியல் கட்சிகள் எப்போதோ தங்களது கொள்கைகளை கைவிட்டு விட்டன. அவர்கள் பல வி‌ஷயங்களில் சமரசம் செய்து கொண்டார்கள்.

ஆனால், இப்போது உதட்டளவில் மட்டுமே அவர்களிடம் கொள்கை இருக்கிறது.

கே:- ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் என்று கூறுகிறார். இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறதே?

ப:- ஆன்மிக அரசியல் என்பது இந்த நாட்டுக்கு ஒன்றும் புதிது அல்ல. மகாத்மா காந்தி ஆன்மிக அரசியலைத்தான் முன் வைத்தார். அவர் மதத்தையும், அரசியலையும் ஒன்றாக கலப்பதை குற்றம் என்று கூறினார். அவர் உண்மையையும், அகிம்சையையும் தனது மதமாக கருதினார்.

ஒருவர் நேர்மையான மனதுடன் இருந்தால் அவருடைய அரசியலும் ஊழல் இல்லாமல் குறுகிய மனப்பான்மை இல்லாமல் இருக்கும். பிரிவினைகள், ஜாதி மத அரசியல் இருக்காது. வெறுப்புணர்வு, பகையுணர்வு எதுவும் இல்லாமல் அனைவரையும் ஒன்றுபடுத்துவது தான் ஆன்மிக அரசியல்.

ஆனால், திராவிட கட்சிகள் ஜாதி ரீதியாக ஊக்குவித்து பிரிவினை அரசியலை கையாண்டன. உலகமே ஒரே கிராமம் என்று அழைக்கின்ற நேரத்தில் அவர்கள் இதற்கு எதிரான நிலைப்பாடுகளில் இருந்தனர்.

அ.தி.மு.க. தமிழக அரசியலில் தனது கடைசி அத்தியாயத்தை எழுத போகிறது. தி.மு.க.வால் இனி பொதுத்தேர்தலில் வெற்றி பெற முடியாது.

ராதாகிருஷ்ணன் நகரில் என்ன நடந்தது? மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக இருந்தார்கள். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கும் அவர்கள் ஓட்டு போட தயாராக இல்லை. பணம் தான் எல்லாவற்றையும் மாற்றி விட்டது என தி.மு.க. வினர் சொல்லலாம்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அவருக்கு ஓட்டு போட்டார்களே? அவர்களும் விலை போனார்கள் என்று சொல்ல முடியுமா?

நான் காமராஜருடன் சேர்ந்த போது, காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு தி.மு.க. பெரும் வெற்றியை பெற்று இருந்தது. இப்போது திராவிட கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வரப்போவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார். #TamilNews #Rajinikanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com