

5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். சென்னை சுற்று ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
இப்போட்டியில் முதல் பாதியின் 17-15 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த இராண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டின.
முடிவில் 27-26 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி, 9-வது போட்டியில் தொல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.
அதன்பின்னர் நடந்த மற்றொரு லீக் போட்டியில் புனேரி பால்டன் - உ.பி. யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 34-33 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது.
இன்றைய லீக் பிரிவு ஆட்டங்கள் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் புனேரி பால்டன் அணி 57 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி 43 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் உ.பி. யோத்தா அணி 49 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தமிழ் தலைவாஸ் அணி 32 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் நீடிக்கின்றன.