

நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள செல்லப்பா காலனியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் யஸ்வந்த் (வயது 18). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதில் இருந்தே யஸ்வந்த் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செல்லப்பா காலனி வந்த அவர், விரக்தியுடன் காணப்பட்டதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யஸ்வந்த் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் யஸ்வந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அவரது அண்ணன் கிருஷ்ணமூர்த்தி (30) கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.