

கோவை:
கோவை சிவானந்தா காலனி அருகே உள்ள அன்னபுதுவீதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் விஜயராகவன் (வயது 26). இவர் வேலைக்கு ஏதுவும் செல்லாமல் தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் தனது தாத்தாவிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இரவு வெளியே சென்ற விஜயராகவன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த அவரது பாட்டி சாப்பிட வருமாறு அழைத்தார். அதற்கு விஜயராகவன் சாப்பாட்டை தனது அறையில் கொண்டு வந்து வைக்கும்படி கூறி விட்டு அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதனையடுத்து அவரது பாட்டி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அறைக்கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அறைக்குள் விஜயராகவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பின்னர் இது குறித்து அவர்கள் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மர்மமான முறையில் இறந்த விஜயராகவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.