மானாமதுரையில் பழிக்குப்பழியாக வாலிபர் கொலை?- நண்பர் உயிருக்கு போராட்டம்

மானாமதுரையில் நேற்று இரவு வாலிபரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதுத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருண்நாதன் என்கிற மைனர் மணி (வயது 29). இவரது நண்பர் வினோத் கண்ணன் (28). இவர் மானாமதுரை அருகே உள்ள உடையகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவர்கள் 2 பேர் மீதும் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. நேற்று இரவு 9 மணியளவில் 2 பேரும் மானாமதுரை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர் .

அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்களை கண்டதும் மைனர் மணியும் வினோத் கண்ணனும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கும்பல் கைகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 2 பேரை நோக்கிப் பாய்ந்தது.

இதனால் மைனர் மணியும், வினோத்கண்ணனும் தப்பி ஓடினர். ஆனால் மர்ம கும்பல் அவர்களை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த்னர். அதற்குள் பகுதி மக்கள் அங்கு திரண்டதால் கொலை கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மைனர் மணி, வினோத் கண்ணன் ஆகியோரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மைனர் மணி பரிதாபமாக இறந்தார். வினோத் கண்ணன் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் படுகொலை நடந்திருப்பது மானாமதுரையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

போலீஸ் துணை சூப்பி ரண்டு சுந்தரமாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.

மைனர் மணி, வினோத் கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் பழிக்குப்பழி வாங்கும் விதமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகள் யார் என்ற விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வினோத் கண்ணனிடம் விசாரணை நடத்தினால் தான் கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர்.

ஆனால் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மூலம் கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com