வாலிபரை கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை- நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நெல்லை:

நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரம் ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் இசக்கி மனைவி முத்துலட்சுமி. இவர் வீட்டுக்கு வடக்கு பகுதியில் உள்ள இடத்தில் வைக்கோல் படப்பு வைத்திருந்தார். இதன் அருகே அந்த பகுதியை சேர்ந்த ஜெயா என்பவருக்கும் வைக்கோல் படப்பு இருந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு வைக்கோல் படப்பு அருகில் உள்ள முள்செடியை ஜெயா மற்றும் அவருடைய மகள் செல்வி, மருமகன் மணப்படை வீடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தொழிலாளி பழனிமுருகன் (30) ஆகியோர் சேர்ந்து வெட்டினர். இதைக்கண்ட முத்துலட்சுமி, அவருடைய மகன்கள் லட்சுமணகுமார் (30), மகேஷ் (24) ஆகியோர் தட்டிக் கேட்டனர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மாலையில் லட்சுமணகுமார் திம்மராஜபுரம் சப்பாணி மாடசாமி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதைக்கண்ட பழனிமுருகன் அவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தாக்க முயன்றார். உடனே முத்துலட்சுமி மற்றும் மகேஷ் அதை தடுக்க முயற்சி செய்தனர்.

அப்போது பழனிமுருகன், மகேசை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். மேலும் லட்சுமணகுமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இதுதொடர்பான வழக்கு நெல்லை 1-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி கோகிலா வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட பழனிமுருகனுக்கு கொலை செய்தற்காக ஒரு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும், கொலை முயற்சி செய்ததற்கு ஒரு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் ராஜ பிரபாகரன் ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com