தஞ்சை அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

தஞ்சை அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த ஆலக்குடி ரெயில்வே கேட் அருகே ரெயிலில் அடிபட்ட நிலையில் வாலிபர் உடல் கிடப்பதாக தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் அடிபட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர்.

வாலிபர் இறந்து கிடந்த தண்டவாளத்தின் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு இருந்தது. எனவே அது இறந்து கிடந்தவருடைய மோட்டார் சைக்கிளாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்து மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் சோதனை செய்தனர். அப்போது அதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போலீசாரிடம் அபராதம் கட்டியதற்கான ரசீது இருந்தது.

அந்த ரசீதில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தபோது இறந்தவர், தஞ்சை வாடிவாசல் கந்தப்படிக்கார தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் வெங்கடேஷ்(வயது 25) என்பது தெரிய வந்தது. இவர், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், தண்டவாளத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com