

கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் சரகம் காவாலக்குடியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 35). அதே ஊரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். கார்த்திகேயன் 1 ஆண்டுக்கு முன்பு வரதராஜனுக்கு ரூ.ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் வரதராஜன் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இந்தநிலையில் சம்பவத்தன்று காவாலக்குடி அருகே பாண்டவையாறு படித்துறையில் வரதராஜன் உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திகேயனும், அவரது நண்பரான கண்கொடுத்தவனிதத்தை சேர்ந்த பிரேமவர்ஷன் ஆகிய இருவரும் சேர்ந்து வரதராஜனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பிரேமவர்ஷன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வரதராஜனை வெட்டினர்.
இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து பிரேமவர்ஷன் (24), கார்த்திகேயன் (33) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.