கடன் பெற்று தருவதாக தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.3 லட்சம் மோசடி- வாலிபர் கைது

கடன் பெற்று தருவதாக தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பி.டி. புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் தனியார் பைனான்ஸ் கம்பெனி மூலம் கடன் பெற்று தரும் என அறிவிப்பை இவர் பார்த்தார். அதை தொடர்ந்து அய்யப்பன் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது ரூ.3 லட்சம் செலுத்தினால் மதுரை பைனான்ஸ் கம்பெனி மூலமாக ரூ. 15 லட்சம் கடன் பெற்று தரப்படும் என்று நாகர்கோவிலை சேர்ந்த ஜீனோ (வயது 32) என்பவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அய்யப்பன் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்தை அனுப்பினார். பணத்தை பெற்றுகொண்ட அந்த நபர் கடன் பெற்று தராமல் காலதாமதம் செய்து வந்தார்.

ஒரு கட்டத்தில் பணம் கொடுத்து கடன் வராததால் அய்யப்பன், ஜீனோவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் ரூ.1 லட்சம் கொடுத்தால் மட்டுமே கடன் பெற்று தர முடியும் என்று கூறி அய்யப்பனை மிரட்டியுள்ளார்.

இது குறித்து அவர் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து ஜீனோவை தேடி வந்தனர். அவரை நாகர்கோவிலில் வைத்து போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்ட அவர் மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்ததும் இதுபோன்று ஆன்லைனில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை திருவள்ளூருக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடன் வாங்கி தருவதாக வரும் இணைய வழி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com