ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இளம்பெண் தற்கொலை

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ராமநாதபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 29). 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு ராமநாதபுரம் அருகே உள்ள கொம்பூதியைச் சேர்ந்த ஒருவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் ராமநாதபுரம் வந்து அந்த வாலிபரை ராமநாதபுரம் வருமாறு அழைத்தார். அவரும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பார்த்தார். அப்போது இளம்பெண்ணின் கழுத்தில் தாலி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? ஏன் இந்த தகவலை கூறவில்லை? என்று கேட்டுவிட்டு நல்ல படியாக ஊர் திரும்புங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.

இருப்பினும் ஐஸ்வர்யா ஊர் திரும்ப விருப்பமில்லை. இதற்கிடையே மனைவியை காணவில்லை என கணவர் ரங்கன் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார்.

ராமநாதபுரத்தில் ஐஸ்வர்யா இருப்பது குறித்து திருச்செந்தூர் போலீசாருக்கு ராமநாதபுரம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

கணவர் ரங்கன் ராமநாதபுரம் வந்து மனைவியை அழைத்த போது ஊருக்கு திரும்ப மாட்டேன். இங்கேயே இருந்து கொள்கிறேன் என தெரிவித்தார். இதனால் போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காப்பகத்தில் ஐஸ்வர்யாவை தங்க வைத்தனர்.

இன்று காலை சிறுநீர் கழித்து வருவதாக வெளியே சென்ற ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com