சாயல்குடி அருகே குடிபோதையில் தந்தையை குத்திக்கொன்ற வாலிபர்

சாயல்குடி அருகே குடிபோதையில் தந்தையை குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வி.வி.ஆர். நகரில் வசித்து வந்தவர் ராமர்(வயது 65). இவரது மகன் சக்திகுமார்(32). இவர் 3 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வந்தார். இருவருமே மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். இந்தநிலையில் சக்திகுமாரின் தம்பி மனைவிக்கு குழந்தை பிறந்து உள்ள நிலையில் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். தந்தை ராமர் மற்றும் சக்திகுமார் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.

மதுபோதைக்கு அடிமையான ராமர் தனது வீட்டில் உள்ள கோழிகளை விற்று மது அருந்தியுள்ளார். இதை சக்திகுமார் கண்டித்துள்ளார். மேலும் சக்திகுமாரும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்தநிலையில் தந்தை-மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த சக்திகுமார் அருகிலிருந்த கூர்மையான கம்பால் தந்தையை தாக்கினார். மேலும் கூர்மையான கம்பின் முனையால் தந்தையின் கழுத்தில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராமர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மதுபோதையில் கொலை செய்ததை அறிந்த சக்திகுமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்த கொலை சம்பவம் பற்றி அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் சாயல்குடி போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் ராமர் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள சக்திகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com