

ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கருவந்தா வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 39). கட்டிட தொழிலாளி.
இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கணேசன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது குடும்ப தேவைக்காக அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி உள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக சரியாக வேலை இல்லாததால் வாங்கிய கடன் தொகைக்கான வட்டியை கட்ட முடியாமல் கணேசன் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடன் கொடுத்தவர்களில் ஒருவரான கருவந்தா தெற்கு தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவர் நேற்று கணேசன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
தனக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 லட்சம் தொகையை சீக்கிரம் திருப்பி செலுத்துமாறு கேட்டுள்ளார். மேலும் கணேசனை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் காலையில் இருந்து வேலைக்கு செல்லாமல் அவர் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். வீட்டில் மனைவி மற்றும் மகள்கள் இல்லாமல் தனிமையில் இருந்த கணேசன் சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அப்போது வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து அவரை மீட்டனர். பின்னர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார்.
இதுகுறித்து ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே கணேசன் இறந்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் வந்து அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்துவட்டி கேட்டு நெருக்கடி கொடுத்த கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததையடுத்து கணேசன் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து கணேசனை தற்கொலைக்கு தூண்டியதாகவும், கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கனகராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை அறிந்த கனகராஜ் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.