ஒட்டப்பிடாரம் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை- சொத்து தகராறில் அண்ணன் வெறிச்செயல்

ஒட்டப்பிடாரம் அருகே இன்று அதிகாலையில் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தொடர்பாக அவரது அண்ணன் போலீசில் சரணடைந்துள்ளார்.
கொலை
கொலை
Published on

ஒட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). தொழிலாளி. இவரது மனைவி புவனேஷ்வரி (40). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

முருகன் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளார். இதனை தனது தந்தையிடம் காட்டுவதற்காக நேற்று இரவு பசுவந்தனை அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரத்தில் உள்ள தந்தை ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி வீட்டிற்கு சென்றார். பின்னர் வெகுநேரமாகி விட்டதால் அங்கேயே தூங்கி விட்டார்.

இன்று அதிகாலை அங்கு தூங்கி கொண்டிருந்த முருகனை அவரது அண்ணன் முனியசாமி என்பவர் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் முனியசாமி பசுவந்தனை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். மணியாச்சி போலீஸ் டி.எஸ்.பி. சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரண் அடைந்த முனியசாமியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

புலிப்பாண்டிக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மூத்தமகனான முனியசாமிக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் புலிப்பாண்டி தனது சொத்துக்களை மற்ற 2 மகன்களுக்கு எழுதிவைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தம்பிகள் மீது முனியசாமி ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்தச்சூழ்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com