கோபிசெட்டிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி அடித்துக்கொலை

கோபிசெட்டிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

கோபி:

கோபிசெட்டி பாளையம் பெரிய மொடச்சூர் சங்கரன் வீதியை சேர்ந்தவர் சங்கர் (46). விசைத்தறி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அதே பகுதியில் உள்ள அண்ணமார் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது திருவிழாவுக்கு வரி போடுவது குறித்து சங்கருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் (42), மோகன்ராஜ் (48), ஆகியோருக்கும் இடையே தகராறு வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அங்கு இருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு வெளியே சென்று விட்டு சங்கர் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

அப்போது அவரை முருகன், மோகன்ராஜ் ஆகியோர் வழிமறித்து முன்விரோதம் காரணமாக தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், மோகன்ராஜ் ஆகியோர், சங்கரை கடுமையாக தாக்கினர்.

இதனால் வலி தாங்க முடியாமல் சங்கர் மயக்கம் அடைந்தார். இதைப்பார்த்த முருகன், மோகன்ராஜ் ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் மயங்கி கிடந்த சங்கரை அந்த பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து கோபி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முருகன், மோகன் ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 2பேரையும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com