திருப்பத்தூர் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகன் அடித்துக்கொலை- தொழிலாளி கைது

மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை, தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வராஜ்- விக்னேஷ்
செல்வராஜ்- விக்னேஷ்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா பெரியகரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), திருப்பத்தூரில் உள்ள வெல்டிங் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா. இவர்களுடைய மகன் விக்னேஷ் (18), 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

இந்த நிலையில் விக்னேஷ் தினமும் மது மற்றும் கஞ்சா போதையுடன் வீட்டிற்கு வருவாராம். மேலும் கஞ்சா அடிக்க பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்ததாகவும், அவரது தாயார் அம்பிகாவை தினமும் அடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்த விக்னேஷ், தந்தையிடம் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர், தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் விக்னேஷ் தந்தை செல்வராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். ஆத்திரம் அடைந்த செல்வராஜ் இரும்பு ராடல் விக்னேஷ் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை, தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com