நாகை நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

முறையாக தண்ணீர் வழங்காததை கண்டித்து நாகை நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை நகராட்சி அலுவலகத்தை பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.
நாகை நகராட்சி அலுவலகத்தை பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை நகராட்சிக்கு உட்பட்ட காடம்பாடி என்.ஜி.ஓ. காலனி, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த காடம்பாடி என்.ஜி.ஓ. காலனி, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நாகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக தடையின்றி குடிநீர் வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், தண்ணீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

குடிநீர் சரிவர வழங்காததால் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com