வேப்பூர் அருகே திருமணத்திற்கு காதலன் மறுத்ததால் இளம்பெண் தற்கொலை

வேப்பூர் அருகே திருமணம் செய்ய காதலன் மறுத்ததால், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினா்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை
தற்கொலை
Published on

வேப்பூர்:

வேப்பூர் அருகே உள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சநாதன் மகள் திலகவதி (வயது 22). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர், திடீரென தூக்குப்போட்டுக் கொண்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திலகவதியும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் கோபி (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு கோபியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் கோபி, திலகவதியை திருமணம் செய்ய மறுத்ததோடு, அவரிடம் பேசுவதையும் நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த திலகவதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதன் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி, அவரது தந்தை சின்னசாமி, தாய் ரவியம்மாள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர். சின்னசாமி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், திலகவதியின் தற்கொலைக்கு காரணமான கோபியின்‌ குடும்பத்தினரை கைது செய்யக்கோரி, திலகவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேப்பூர் கூட்டுரோட்டில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோபியின் குடும்பத்தினர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதனை ஏற்று அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com