ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை- காப்பாற்ற முயன்ற கணவரும் பலி

ஆண்டிப்பட்டி அருகே குடும்ப பிரச்சினையில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், காப்பாற்ற முயன்ற கணவரும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சசிக்குமார், விஜயலட்சுமி
சசிக்குமார், விஜயலட்சுமி
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஜி.உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஏ.பெருமாள்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் விஜயலட்சுமி (வயது 22). இவருக்கும், கடமலைக்குண்டு அருகே உள்ள பொன்னன்படுகையை சேர்ந்த மாயாண்டி மகன் சசிக்குமார் (29) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சசிக்குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 வயதில் கவினேஷ் என்ற மகன் உள்ளான்.

திருமணத்திற்கு பின்பு பொன்னன்படுகையில் கணவன்-மனைவி இருவரும் வசித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி கோபித்து கொண்டு தனது குழந்தையுடன் ஏ.பெருமாள்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதனையடுத்து சசிக்குமார் அடிக்கடி ஏ.பெருமாள்பட்டிக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு விஜயலட்சுமியை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் ஏ.பெருமாள்பட்டிக்கு வந்த சசிக்குமார், மனைவி விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றியநிலையில், விரக்தியடைந்த விஜயலட்சுமி வீட்டைவிட்டு வெளியேறி அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சசிக்குமார், மனைவியை காப்பாற்றுவதற்காக அந்த கிணற்றில் குதித்தார். இதில், கணவன்-மனைவி 2 பேரும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராஜதானி போலீசார் மற்றும் ஆண்டிப்பட்டி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படைவீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இருந்து சசிக்குமார் மற்றும் விஜயலட்சுமியின் உடல்களை மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், காப்பாற்ற முயன்ற கணவரும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com