ஆத்தூரில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

ஆத்தூரில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்த இடிபாட்டில் இருந்து புஷ்பாவின் உடலை பொதுமக்கள் மீட்டபோது எடுத்த படம்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்த இடிபாட்டில் இருந்து புஷ்பாவின் உடலை பொதுமக்கள் மீட்டபோது எடுத்த படம்.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம், ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் வீர முத்துமாரியப்பன் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். அவரது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட முடிவு செய்தார்.

அதன்படி பழைய வீட்டை இடிக்கும் பணி நடந்து வந்தது. அந்த வீட்டை இடித்து புதிய வீடு கட்டுமான பணியை ராஜா என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார்.

நேற்று மதியம் வடக்கு உடையார் பாளையத்தை சேர்ந்த புஷ்பா (வயது 55) என்பவரும், நேரு நகரை சேர்ந்த சபி (28) என்ற வாலிபரும் பழைய வீட்டை இடித்து, அங்கு இருந்த பழைய பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அங்கு ஒரு பக்க சுவரை அவர்கள் இடித்து கொண்டிருந்த போது, மற்றொரு புறம் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த சுவர் புஷ்பா மீது விழுந்து அமுக்கியது. இதில் இடிபாட்டில் சிக்கியதில் மூச்சு திணறி புஷ்பா பரிதாபமாக இறந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சுமார் 2 மணி நேரம் போராடி இறந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே ஆத்தூர் தாசில்தார் அன்புச்செழியன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com