

தூத்துக்குடி:
சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது சார்பதிவாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்களிடம் இருந்து ரூ.3½ லட்சம் கைப்பற்றப்பட்டது. இந்த பணத்துக்குரிய ஆவணங்கள் அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் இல்லை.
இதைத்தொடர்ந்து கணக்கில் வராத ரூ.3½ லட்சத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து சார்பதிவாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்தனர்.
மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 12.25 மணி வரை சுமார் 6 மணி நேரம் நீடித் தது. பின்னர் சார்பதிவாளர் ரவிச்சந்திரனை விசாரணைக்காக போலீசார் தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
இன்று 2-வது நாளாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.