

வேடசந்தூர் அருகே உள்ள ஆர்.கோம்பையை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 65). விவசாயி. இவரது உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் துக்கம் விசாரிப்பதற்காக காளிமுத்துவும், அவரது மனைவியும் நேற்று வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதனால் அவர்களது வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதற்கிடையே மாலையில் வீடு திரும்பிய காளிமுத்து, நகை-பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.