

வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் நடைபெறும் பத்திரப்பதிவு தொடர்பான பணிகளுக்காக லஞ்சம் பெறுவதாக தொடர் புகார் வந்தது.
இதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹமசித்ரா இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான அதிகாரிகள் திடீரென வாணியம்பாடி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
அலுவலகத்தை பூட்டி தொடர்ந்து 8 மணி நேரம் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பத்திரபதிவு மேற்கொள்ள அலுவலக வளாகத்தில் காத்திருந்த பொதுமக்களை வெளியேற விடமால் தடுத்து நிறுத்தினர்.
அலுவலக வளாக கேட்டை மூடி ஒவ்வொருவராக விசாரணை நடத்தி அவர்களின் முகவரியை பெற்று விசாரணைக்கு பின்னரே வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் 2 மணி நேரமாக அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சார் பதிவாளர் கார்த்திகேயன் காரில் சோதனை நடத்தினர். அதிலிருந்து ஆவணங்களை கைப்பற்றினர்.
இரவு 2.20 மணியை வரை நடைபெற்ற தொடர் சோதனையில் கணக்கில் வராத ரூ.94 ஆயிரம் சிக்கியது. இது குறித்து சார் பதிவாளர் கார்த்திகேயன் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.