

களியக்காவிளை:
களியக்காவிளை அடுத்த மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார் ராஜ் (வயது 48), வேன் டிரைவர். இவருடைய மனைவி அசோகராணி. இவர்களுக்கு குழந்தை இல்லை. குமார் ராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குமார் ராஜை விட்டு மனைவி அசோகராணி பிரிந்து சென்று விட்டார். இதனால் குமார் ராஜ் மனவருத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமார் ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த களியக்காவிளை போலீசார் குமார் ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.