

தொப்பூர்:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஊத்துப்பள்ளத்தை சேர்ந்தவர் விஜி (வயது 30) இவருக்கும் ஓமல்நத்தத்தை சேர்ந்த சுமித்ரா (வயது 22) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள சுமித்ராவுக்கு நேற்று வளைகாப்பு நடந்தது. வளைகாப்பு முடிந்து மதியம் 2 மணிக்கு ஊத்துப்பள்ளத்தில் இருந்து சுமித்ராவை அரவது பெற்றோர் மற்றும் உறவினர்கள், வேனில் ஓமல்நத்தத்துக்கு அழைத்துச் சென்றனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 28) என்பவர் ஓட்டி சென்றார். சிறிது தூரம் சென்ற நிலையில், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர மின்கம்பத்தின் மீது மோதி, அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாகல்பட்டியை சேர்ந்த அஜய் (வயது 23) என்பவர் வேனின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கர்ப்பிணி பெண் சுமித்ரா உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர். காயமடைந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த விபத்தின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த அஜய்க்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவரது தந்தையும் கடந்த 5 மாதத்திற்கு முன் இறந்துள்ளார். இதனால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.