நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிறது- தேர்தல் ஆணையம் ஏற்பாடு தீவிரம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு அந்த பட்டியலையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
Published on

சென்னை:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான அட்டவணை தயாரிப்பு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடித்துள்ளது.

இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி வருகிறது.

பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பதவிகளுக்கு 2019-ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டன. மீதம் உள்ள மாவட்டங்களுக்கு கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர்கள், கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதன் அடுத்த கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற தேர்தல் நடத்தப்பட உள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி, இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

இதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு அந்த பட்டியலையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

எந்தெந்த வார்டுகள் ஆண் வார்டு, பெண் வார்டு, பொது வார்டு உள்ளிட்ட விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடத்துவது, 2-வது கட்டமாக எந்தெந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது என்ற அட்டவணை தயாரிக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த பணி ஓரிரு நாளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வருகிற 25-ந் தேதி தேர்தல் தேதிக்கான அட்டவணையை வெளியிட ஆணையம் முடிவு செய்திருந்தது.

ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெள்ளசேத பயிர் நிவாரணம், பொங்கல் தொகுப்பு என அறிவித்து தி.மு.க. தேர்தலுக்கு தயாராகி விட்டது. ஓரிரு நாளில் வெள்ள நிவாரண உதவி அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து தி.மு.க. விருப்ப மனுவும் வாங்கி வருகிறது.

எனவே இம்மாத இறுதியில் தேர்தல் தேதி வெளியாகி விடும் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

புதிதாக பிரிக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி உள்ளிட்ட தரம் உயர்த்தப்பட்ட மாநராட்சிகளுக்கு இப்போது தேர்தல் நடைபெறாது.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட 15 பழைய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மட்டுமே இப்போது தேர்தல் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com