கார் திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது

கார் திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள ஒரு வீடு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிலர் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், 3 பேர் சேர்ந்து காரை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கார் மீட்கப்படவில்லை. அதேபோல் மேலும் 2 பேர் தலைமறைவாக இருந்தனர்.

இந்த நிலையில் கிடப்பில் உள்ள வழக்குகளை துரிதப்படுத்தவும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதில் தலைமறைவாக இருந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பிரபல கொள்ளையனான இவர் மீது ஏற்கனவே 25 வழக்குகள் உள்ளன. அவரிடம் நடந்த விசாரணையில், ஊட்டி வெலிங்டன் குன்னூர் பகுதியை சேர்ந்த ஜெரால்டு ஆரோக்கியநாதன் (வயது 35) என்பவரும் சிக்கினார்.

அவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறையில் இருந்ததால், கோர்ட்டு உத்தரவுபடி ஒரு நாள் காவலில் எடுத்து சுசீந்திரம் போலீசார் விசாரித்தனர். என்.ஜி.ஓ. காலனியில் காரை திருடியதையும், மாலையணிந்தான் குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளை அடித்ததையும் ஒப்புக்கொண்டார்.

தொடக்கத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஜெரால்டு ஆரோக்கியநாதன், தற்போது அதிக அளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com