செம்மஞ்சேரி-மாதவரத்தில் லேப்டாப், செல்போன் கொள்ளையர்கள் கைது

செம்மஞ்சேரி-மாதவரத்தில் லேப்டாப், செல்போனை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சென்னை:

செம்மஞ்சேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஆண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு தங்கி இருந்து ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் சசிகுமார். இவர் நேற்று முன்தினம் காலையில் 9 மணி அளவில் தனது அறையில் படுத்து தூங்கினார். மதியம் எழுந்து பார்த்தபோது அறையில் இருந்த தனது லேப்டாப்பை காணாமல் திடுக்கிட்டார்.

இதுபற்றி செம்மஞ்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தியதில் 2 பேர் விடுதியில் புகுந்து சசிகுமாரின் அறையில் லேப்டாப்பை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தண்டையார்பேட்டையை சேர்ந்த பாலாஜி, காசிமேட்டை சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 லேப்டாப், 6 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

திருட்டு நடைபெற்ற ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமி‌ஷனர் மகேஸ்குமார் அகர்வால், தென் சென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், இணை கமி‌ஷனர் பாபு, துணை கமி‌ஷனர் விக்ரமன் ஆகியோர் பாராட்டினர்.

மாதவரம் பால்பண்ணை போலீஸ் எல்லைக்குட்பட்ட பெரிய மாத்தூர் புவனேஸ்வரி நகரை சேர்ந்த அப்பாசாமி என்பவரிடம் செல்போனை பறித்து சென்ற சரண்குமார் என்பரும் கைது செய்யப்பட்டார்.

அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com