இரட்டை குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்தது ஏன்?- பரபரப்பு தகவல்

நாகர்கோவிலில் 2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நந்தினி
நந்தினி
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் வட்டவிளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தரூபன், தச்சு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நந்தினிக்கும் (வயது 26) கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1½ வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவும் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனை தொடர்ந்து ஆனந்தரூபன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் தெரிகிறது. பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டில் உள்ள ஒரு அறையில் நந்தினி தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்தரூபன், மனைவியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நந்தினியை பரிசோத்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நந்தினியின் தோழிகள் அவரை தொடர்பு கொண்டு நாம் அனைவரும் சேர்ந்து ஆன்லைனில் பொருட்களை வாங்கி, வியாபாரம் செய்யலாம். இந்த தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதுதொடர்பாக நந்தினி தனது கணவரிடம் கருத்து கேட்டுள்ளார்.

இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாகத்தான் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நந்தினி, தற்கொலை செய்யும் முடிவை தேடிக்கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com