ஓட்டப்பிடாரம் அருகே இரட்டை சகோதரர்கள் குளத்தில் மூழ்கி பலி

ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரர்கள் பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
குளத்தில் மூழ்கி பலியான அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ்.
குளத்தில் மூழ்கி பலியான அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ்.
Published on

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல அரசரடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அவருடைய மனைவி பூரணம் (வயது 40). இவர்களுக்கு மகேஸ்வரி (14), இரட்டையர்களான அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ் (12) குழந்தைகள் இருந்தனர். செல்வராஜ் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

பூரணம், அவருடைய தம்பி ராமசாமியுடன் சேர்ந்து மேல அரசடி விலக்கு ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் மதியம் பூரணம் தனது மகன்களிடம், வீட்டில் உள்ள மகளுக்கு ஓட்டலில் இருந்து உணவு கொடுத்து அனுப்பினார். ஆனால், அவர்கள் இருவரும் வீட்டிற்கு செல்லவில்லை. மதிய உணவிற்காக காத்திருந்த மகேஸ்வரி, சாப்பாடு வரவில்லை என்று தாயிடம் செல்போனில் கேட்டுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூரணம் கடையை அடைத்துவிட்டு மகன்களை தேட ஆரம்பத்தார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு மேற்கு பக்கத்தில் உள்ள குளத்தில் சாப்பாட்டு பொட்டலங்கள் சிதறிக்கிடப்பதை சிலர் பார்த்துள்ளனர். எனவே எட்டயபுரம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடியபோது தண்ணீரில் மூழ்கி கிடந்த இரட்டையர்கள் உடல் மீட்கப்பட்டது. வீட்டிற்கு செல்லும் வழியில் குளிக்க முயன்ற சிறுவர்கள் குளத்தில் மூழ்கியது விசாரணையில் தெரியவந்தது. இரட்டையர்கள் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com