சட்ட விரோதமாக ரெயில் டிக்கெட் விற்பனை: டிராவல்ஸ் உரிமையாளர் கைது

திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக ரெயில் டிக்கெட் விற்பனை செய்தது தொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் செயல்படும் ரெயில் இ-டிக்கெட் விற்பனை மையங்களில் சட்ட விரோதமாக இ-டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் திண்டுக்கல்லில் உள்ள இ-டிக்கெட் விற்பனை மையங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது திண்டுக்கல்-கரூர் ரோட்டில் உள்ள ரெயில் இ-டிக்கெட் விற்பனை செய்யும் ஒரு டிராவல்சில் அந்த நிறுவனத்துக்கான உரிமத்தை பயன்படுத்தி இ-டிக்கெட் பெறாமல், பொதுமக்களின் இ-மெயில் முகவரி, ஆவணங்கள் மூலம் இ-டிக்கெட் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து டிராவல்ஸ் உரிமையாளரான திண்டுக்கல்லை சேர்ந்த கண்ணன் (வயது 41) என்பவரை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஏற்கனவே இதுபோன்று பொதுமக்களின் ஆவணங்களை பயன்படுத்தி இ-டிக்கெட் விற்ற வழக்கில் 2 முறை கைதாகி விடுதலையாகி இருப்பதும், தற்போது 3-வது முறையாக மீண்டும் அதேபோல் இ-டிக்கெட்டுகளை விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 22 இ-டிக்கெட்டுகள், ரூ.22 ஆயிரத்து 600 மற்றும் இ-டிக்கெட்டுக்கு விண்ணப்பிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com