

சென்னை:
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைபெறும். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு நிறைவடைந்தது.
அதன் பின்னர் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இந்த நிலையில் அனைத்து தொழிசங்கங்களும், ஊதிய உயர்வு, அலவன்ஸ் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கும் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து கடந்த மாதம் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யுசி., விடுதலை சிறுத்தை, பாட்டாளி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை கொடுத்தன.
இதற்கிடையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோட்டையில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 8 போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர். நிலுவையில் உள்ள பணிக்கொடை வழங்குதல், ஓய்வு பெற்றவர்களுக்கு சேரவேண்டிய நிலுகை தொகை எவ்வளவு, படி, அலவன்ஸ் வழங்குவதில் தேவைப்படும் கூடுதல் நிதி, எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என்பது குறித்து பேசினார்கள்.
இதையடுத்து அடுத்தகட்டமாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தவாரம் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிகிறது.
இந்த மாத இறுதிக்குள் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்து ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.