

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு மையம் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்தது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு இங்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டதால் இங்குள்ள மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தினமும் ஏராளமானோர் திரண்டனர். ஏற்கனவே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற தினமும் ஏராளமானோர் வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்ததால் அங்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவந்த கொரோனா தடுப்பூசி மையம் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கு நேற்றுமுதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் இந்த மையத்தில் நேற்று காலை முதல் அதிக அளவில் திரண்டனர். நீண்ட வரிசையில் அந்த பகுதியில் காத்திருந்தனர். அவர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி போடும் பணியை மருத்துவத் துறை பணியாளர்கள் மேற்கொண்டனர். இந்த மையம் அமைந்துள்ள பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் தர்மபுரி நகராட்சி பகுதிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரி நகராட்சி பகுதியில் தடுப்பூசி போடும் பணியை ஆணையர் தாணுமூர்த்தி மேற்பார்வையில் துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.