

சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மாரியப்பன் (வயது 42). வியாபாரியான இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கடைகளுக்கு வியாபாரம் செய்வது வழக்கம்.
நேற்று வழக்கம் போல அம்ைபயில் இருந்து பத்தமடைக்கு வியாபாரத்திற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பாளையங்கோட்டை - பாபநாசம் நெடுஞ்சாலையில், சேரன்மாதேவி தனியார் பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது நெல்லையில் இருந்து வெள்ளங்குளி நோக்கி வந்த காரும், மாரியப்பனின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் உடனடியாக விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தது பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் மகன் செந்தில்குமார் (48) என்பது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.