அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்குவதில் உறுதியாக இருக்கும் கமல்

அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத புதிய அணி தமிழகத்தில் நிச்சயம் அமையும் என்றும், அந்த அணியை வலுப்படுத்துவது தொடர்பாகவே கமல்ஹாசன் சிந்தித்து வருவதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் புதிய அணியை உருவாக்குவோம் என்று ஏற்கனவே கூறி இருந்தார்.

ஆனால் கமல்ஹாசன், தி.மு.க.வோடு கூட்டணி வைக்கப் போவதாக அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றன. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சேரப் போவதாகவும் இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இருவரும் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் இதனை மறுத்தார். இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் கமலுக்கு 25 இடங்கள் வரையில் ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், அதைவிட குறைவான தொகுதிகளையே காங்கிரசுக்கு ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் இதனை முழுமையாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘கழகங்களுடன் கூட்டணி கிடையாது’’ என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறிவிட்டார்.

நாங்கள் முதல்-அமைச்சர் வேட்பாளராக அவரை அறிவித்துவிட்டு களப்பணியாற்றி வருகிறோம். இந்த நேரத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி சேரப்போவதாக திட்டமிட்டே சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்தனர்.

அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத புதிய அணி தமிழகத்தில் நிச்சயம் அமையும் என்றும், அந்த அணியை வலுப்படுத்துவது தொடர்பாகவே கமல்ஹாசன் சிந்தித்து வருவதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை. அது போன்ற பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பின்னர் கேட்ட இடங்கள் கிடைக்காத விரக்தியில் சில கட்சிகள் நிச்சயம் வெளியேறும் என்றே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக நம்புகிறார்கள். அது போன்ற சூழலில் மனக்கசப்புடன் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளோடு ‘கை’ கோர்க்க கமல்ஹாசன் காத்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி, சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசனுக்கு கூட்டணி அழைப்பு விடுத்து இருந்தது. இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், காங்கிரசின் அன்பை பெற்றவர்கள் நாங்கள் என்று கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com