திருப்பூரில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பர் கைது

திருப்பூரில் வாய்த்தகராறு காரணமாக தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

தூத்துக்குடியை சேர்ந்தவர் இசக்கி (வயது 27). இவர் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவருடைய நண்பர் மதுரையை சேர்ந்த சங்கர் (30). இவரும், இசக்கியுடன் தங்கி இருந்தார். இவர்கள் 2 பேரும் பனியன் நிறுவன தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அவர்கள் வசித்த வீடு பூட்டியிருந்தது. வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வடக்கு போலீசார், வீட்டினுள் மூடிய நிலையில் இருந்த சிமெண்டு தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், தொட்டிக்குள் பிணமாக கிடந்தவர் இசக்கி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இசக்கியுடன் தங்கி இருந்த சங்கரை போலீசார் தேடியபோது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. இந்த நிலையில் ஈரோட்டில் ஒரு குற்ற வழக்கில் சங்கர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது திருப்பூர் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருப்பூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டது. இதையடுத்து சங்கரை ஒரு நாள் காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் இசக்கியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், கொலை வழக்கில் சங்கரை முறைப்படி போலீசார் கைது செய்தனர். பிறகு நேற்றுமாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சம்பவத்தன்று நண்பர்களான இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியுள்ளது. இதில் சங்கர், இசக்கியை அடித்து கொலை செய்து விட்டு, உடலை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்துள்ளார். பிறகு அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தொடர்ந்து ஈரோட்டில் மற்றொரு வழக்கில் அவர் சிக்கியுள்ளார். இப்போது இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com