திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் பெண் மரணம்- உறவினர்கள் முற்றுகை

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள மாடப்பள்ளி களரூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜனா. இவரது மனைவி நந்தினி (வயது 24). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

நந்தினி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கதிரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இரவு நேரத்தில் டாக்டர்கள் யாரும் இல்லை என கூறியிருக்கிறார்கள்.

இதனையடுத்து திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நந்தினியை சேர்த்தனர். அங்கு ஆபரே‌ஷன் மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் நந்தினி உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அவரை வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நந்தினியை அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து நந்தினி உடல் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.

இதனை அறிந்த நந்தினியின் உறவினர்கள் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை. நந்தினி சாவுக்கு காரணமான டாக்டர், நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com