நெல்லை அருகே தி.மு.க. நிர்வாகி கொலையில் 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு - உறவினர்கள் சாலை மறியல்

நெல்லை அருகே தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

முக்கூடல்:

நெல்லை முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை(வயது 40). நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக உள்ள இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அரிய நாயகிபுரத்திற்கு வடக்கே உள்ளது.

நேற்று மாலை அவர் தனது மோட்டார் சைக்கிளில் கோழிப்பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது உறவினரான அய்யப்பன், செல்லத்துரையை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

செல்லத்துரையும், அய்யப்பனும் உறவினர்கள். இருவரது வீடும் அருகருகே தான் அமைந்துள்ளது. இவர்கள் 2 பேரும் எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த அய்யப்பனின் மகன் திருமணத்திற்கு கூட செல்லத்துரை கலந்து கொண்டார்.

இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்லத்துரையை கொலை செய்ய அய்யப்பன் திட்டம் தீட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அய்யப்பன், வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், முத்துகுமார், மாரியப்பன், ஆதிமூலம், கணேசன் ஆகிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இன்று காலை முதல் செல்லத்துரையின் உறவினர்கள் முக்கூடல்- நெல்லை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், சிலரின் தூண்டுதலின் பேரில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் செல்லத்துரையின் உறவினர்கள் கோ‌ஷமிட்டனர்.

தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை செல்லத்துரையின் உடலை வாங்கப்போவதில்லை என்று அவர்கள் கூறினர். இதனால் பஸ் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com