திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்தவரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் ராயபுரம் விரிவு எஸ்.பி.ஐ.காலனி பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 35) . இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்துள்ளார். இவர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் மனு கொடுத்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் காந்திநகர் இ.பி. காலனியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் ஒரு வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருவதாக என்னிடம் பழகினார். ஆனால் கடந்த ஜனவரி மாதம் கோகுலகிருஷ்ணன் வங்கியில் வேலையில் இருந்து நின்று விட்டதாகவும், வாகனங்களை வாங்கி விற்கும் ஏஜென்சி வைத்து நடத்துவதாகவும், தொழிலை அபிவிருத்தி செய்ய பணம் தேவைப்படுவதாகவும், லாபத்தில் ஒரு கார் விற்பனை செய்தால் ரூ.20 ஆயிரம் கொடுப்பதாகவும் என்னிடம் கூறினார்.

அதன்பேரில் நானும் கோகுலகிருஷ்ணனும் ஒப்பந்தம் செய்தோம். பின்னர் கோகுலகிருஷ்ணன் வங்கிக் கணக்கில் ரூ.22 லட்சத்து 94 ஆயிரத்து 500 ஆன்லைன் மூலமாக நான் பண பரிமாற்றம் செய்தேன். ஆனால் அதன்பிறகு கோகுலகிருஷ்ணன் ஒப்பந்தப்படி நடக்காமல், கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அவருடைய அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது ஆபாசமாக பேசியதுடன், பணம் கேட்டு வந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். பின்னர் தலைமறைவாகிவிட்டார். எனவே பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி துணை கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில் கோகுலகிருஷ்ணன் பலரிடம் இதுபோல் கோடிக்கணக்கில் ஏமாற்றி மோசடி செய்து விட்டு குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் சொர்ணவல்லி ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் ஏட்டு வினோ ஆனந்த், போலீஸ்காரர் கருணாசாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோகுலகிருஷ்ணனை (32) தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டையில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com