சேலம் அருகே ரூ.20 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட 3 மாத ஆண் குழந்தை மீட்பு

சின்னகண்ணுவிடம் அதிகாரிகள் விசாரித்தபோது 30 நாட்களுக்கு முன்பு குழந்தையை ரூ.20 ஆயிரத்திற்கு வாங்கியதை ஒப்புக்கொண்டார்.
குழந்தை மீட்பு
குழந்தை மீட்பு
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் மேட்டுடையார் பாளையத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது 70). இவரது மனைவி சாந்தா (60). இவர்களுக்கு தற்போது வரை குழந்தை இல்லை. அவர்களுக்கு அந்த பகுதியில் 5 ஏக்கர் சொத்து உள்ளது.

இதையடுத்து குழந்தையை தத்து எடுத்து வளர்க்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் ஆண் குழந்தையை 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினர். அதனை கடந்த சில நாட்களாக செல்லமாக வளர்த்து வந்தனர். திடீரென வயதான தம்பதிகள் குழந்தையை வளர்ப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சேலம் குழந்தைகள் நலக்குழு அதிகாரி ஷீலா நேற்று அங்கு சென்று குழந்தையை மீட்டு வந்தார். பின்னர் சேலம் காப்பகத்தில் அந்த குழந்தை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சின்ன கண்ணுவிடம் அதிகாரிகள் விசாரித்த போது 30 நாட்களுக்கு முன்பு குழந்தையை ரூ.20 ஆயிரத்திற்கு வாங்கியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் தனக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் சொத்து உள்ளதாகவும், வாரிசு இல்லாததால் அந்த குழந்தையை விலை கொடுத்து வாங்கியதாகவும் கூறினார். தொடர்ந்து இன்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். குழந்தையை விற்ற நபர் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். அவரை பிடித்து விசாரித்தால் இந்த வழக்கில் முழு விவரம் தெரிய வரும் என்பதால் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com