

திருவள்ளூர்:
டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் 3-வது நாளாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் சங்கத்தினர் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசாருக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 83 பெண்கள் உள்பட 197 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.